இந்தியாவின் தலைநகர் போர்க்களமானது எப்படி?
டெல்லி: டெல்லியில் டிராக்டர் பேரணியில் போலீசார், விவசாயிகள் இடையே கடும் மோதல் மூண்டது. போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்தினார்கள். குடியரசு தினம் அன்று அமைதியாக இருக்க வேண்டிய தலைநகர் போர்க்களம் ஆனது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசு அவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அது தோல்வியில்தான் முடிந்து வருகிறது. வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இன்று டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களுடன் பிரமாண்ட பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் ஏற்கனவே தெரிவித்த்தனர். அதன்படி திட்டமிட்டபடி பேரணி இன்று தொடங்கியது. ஆனால், சில விவசாயிகள் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர். இதனால் சில விவசாயிகள் தடுப்புகளை அகற்றி போலீசார் மீது வீசினார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்தினார்கள்.
இதன்போது பல விவசாயிகள் படுகாயம் அடைந்தனர் ஒரு விவசாயி உயிரிளந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன உயிரிளப்புக்கள் அதிகரிக்கலாம் எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலீசாரின் இந்த ஈவிரக்கமற்ற தாக்குதலை எதிர்த்து சில விவசாயிகள் பொலிசாரை தாக்கியதுடன் சில பொலிஸ் வாகனங்களையும் தாக்கியுள்ளனர்.

